அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் இந்தியாவுக்குச் சாதகமாகலாம்

அமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் இந்தியாவுக்குச் சாதகமாகலாம்

2 mins read
7a2e1a91-5c71-4150-9f74-939363aba79b
-

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசலால் இந்தியா பயனடையக்கூடும் என சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆயினும், இந்தியாவுக்குத் தேவைப்படும் அவசியமான நிலம் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்கள், அங்கு தொழில் நடத்த முனையும் நிறுவனங்களுக்குச் சவாலாக இருக்கக்கூடும் என அவர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசலால், சில உற்பத்தி நிறுவனங்கள் உயர் வரிகளைத் தவிர்ப்பதற்காக சீனாவிலிருந்து வெளியேறுகின்றன. இதன் விளைவாக, வியட்னாம் போன்ற தென்கிழக்காசிய நாடுகள் பயனடைகின்றன. இந்தியாவும் பயனடைய வாய்ப்புள்ளது.

"அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசலின் மத்தியில், இந்தியா அதன் வர்த்தகத் துறையை விரிவுபடுத்தலாம், குறிப்பாக அமெரிக்கா சீனாவுக்கு வரி விதித்திருக்கும் பிரிவுகளின்கீழ்," என்று சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கி குழுமத்தின் பொருளியலாளர் ராதிகா ராவ் ஆகஸ்ட் மாத அறிக்கையில் எழுதியிருந்தார்.

"உற்பத்தி நிறுவனங்கள் மாற்று இடங்கள் தேடி வருவதால், வர்த்தகம் தவிர, திசைதிருப்பப்படும் முதலீடுகளாலும் இந்தியா பயனடையக்கூடும்," என்றார் அவர்.

ஜெர்மனியின் மக்கள் தொகை இந்தியாவைவிட கிட்டத்தட்ட 16 மடங்கு குறைவாக இருந்தாலும், 2017ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஏற்றுமதிகள் உலகின் மொத்த வர்த்தகத்தில் 8.17 விழுக்காடாக இருந்தது. அதே சமயத்தில், இந்தியாவின் ஏற்றுமதிகள் 1.68 விழுக்காடு மட்டுமே.

இந்தியாவில் மருந்து தயாரிப்பு, ரசாயனம், பொறியியல் ஆகிய மூன்று முக்கிய துறைகள் வர்த்தகப் பூசலால் பயனடையக்கூடும் என்று சிஎன்பிசி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் ராவ் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் துறைகளில் இந்தியா ஏற்கனவே உலகளவில் போட்டித்திறனுடன் திகழ்வதால், இந்தத் துறைகளின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய சாதகமான நிலையில் இந்தியா இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள புத்தாக்கக் கொள்கைகள், உள்கட்டமைப்புகளின் மேம்பாடு ஆகியவற்றுடன் இந்தியா வேகமாகச் செயல்படவேண்டும். விரைவாகச் செய்து முடிப்பதற்கு இன்னும் நிறைய இருப்பதாக அவர் சொன்னார்.

இந்தியாவின் உற்பத்தித் துறை, குறிப்பாக நெசவுத்துணி, காலணி, மின்னணுவியல் ஆகியனவும் பயனடையக்கூடும் என்று ஐஹெச்எஸ் மார்க்கிட்டின் தலைமை பொருளியலாளர் ராஜீவ் பிஸ்வாஸ் மின்னஞ்சல்வழி தெரிவித்தார்.

ஏனெனில், வரி உயர்வின் காரணமாக அமெரிக்கா, சீனா ஆகியவற்றின் ஏற்றுமதிகள் அதிக விலையாகும்போது, சில உற்பத்தி நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகளுக்கு இடம்பெயரக்கூடும் என்றார் அவர்.