நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு

‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் அனல் பேச்சுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. தமிழகத்தின் ஆளும் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் பாராட்டியுள்ளன.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

அப்போது பேசிய விஜய், அண்மையில் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பதாகை சரிந்து விழுந்ததால் அவர் நிலைகுலைந்து விழ, பின்னால் வந்த லாரி மோதி அவர் மரணமடைந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ஆட்சியாளர்களை மறைமுகமாகச் சாடினார்.  “யார் மீது பழிபோடுவது எனத் தெரியாமல் லாரி ஓட்டுநர் மீதும் பதாகையை அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகின்றனர். யாரை எங்கே உட்கார வைக்கணுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் நன்றாக இருக்கும்,” என்று விஜய் ஆதங்கப்பட்டிருந்தார்.

சுபஸ்ரீ மரணத்திற்கு டுவிட்டரில் ‘ஹேஷ்டேக்’ போட்டால் நன்றாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

“சரியான நேரத்தில் சரியான மேடையைப் பயன்படுத்தி நியாயத்திற்காகக் குரல் கொடுத்த தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்!” என்று செய்தியாளர்களிடம் கமல் சொன்னார்.

விஜய்யின் கருத்துக்கு திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

“விஜய்யின் பேச்சில் நியாயம் இருக்கிறது. பதாகை வைத்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதை அச்சடித்துத் தந்த அச்சகத்திற்கு ‘சீல்’ வைக்கின்றனர்.

மாநிலத்தை ஆளும் அரசாங்கத்தின் அவலநிலையைத் துணிச்சலாகச் சுட்டிக்காட்டிய விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

மாறாக, ‘பிகில்’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக விஜய் மேற்கொண்டுள்ள பரபரப்பு அரசியல் இது என அதிமுக பேச்சாளர் வைகைச்செல்வன் தெரிவித்து இருக்கிறார்.

இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக பதாகைகள் வைக்கவேண்டாம் என விஜய் கோரிக்கை விடுத்ததை அடுத்து, பதாகைகள் எதுவும் வைக்கப்படவில்லை.