புதுடெல்லி: நிலவில் இறங்கியுள்ள விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான 'இஸ்ரோ' சந்திரயான் 2 விண் கலத்தை விண்ணில் பாய்ச்சியது.
இதில் இருந்து பிரிந்து சென்று 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்ய இருந்த லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தொலைவில் இருந்தபோது பூமி யுடனான தொடர்பை இழந்தது.
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளும் அமெரிக்காவின் நாசாவும் தொடர்ந்து முயன்று வந்தன.
ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
மேலும் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் வெள்ளிக்கிழமை யோடு முடிவடைந்தது.
அதே சமயத்தில் விக்ரம் லேண்டருடன் தொடர்புகொள் வதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவும் நேற்று நிறைவடைந்தது.
இதற்கிடையே நிலவில் இரவு பொழுது துவங்கியதால் மிக கடுமையான உறைபனியால் லேண்டரும் அதனுடன் அனுப்பப் பட்ட ரோவரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று திரு சிவன் அறிவித்தார்.
"லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டது. அதனால் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் சந்திரயான் 2 உடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆர்பிட்டரில் 8 கருவிகள் உள்ளன. இவை அனைத்தும் சிறப்பாக இயங்கி வருகின்றன. ஆர்பிட்டர் ஓராண்டிற்குப் பதிலாக அடுத்த ஏழு ஆண்டுகள் ஆய்வுகளை நடத்தும். சந்திரயான் 2 திட்டம் 98 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளது" என்று திரு சிவன் மேலும் தெரிவித்தார்.

