ஐதராபாத்: ஐதராபாத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியின் குடும்பத்தினர், ஓர் இளம் பெண்ணை துன்புறுத்தும் காணொளிக் காட்சி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஓய்வுபெற்ற ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி நூட்டி ராமமோகன ராவ், அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகிய மூவரும் மருமகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாக கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் காட்டுகின்றன.
காணொளியில் நேரம் ஏப்ரல் 20, 2019 அன்று இரவு 11 மணி என பதிவாகியுள்ளது.
இந்தக் காணொளியில் நான்கு பேர் காணப்படுகின்றனர்.
ஓர் இளம் ஜோடியும் ஒரு வயதான ஜோடியும் அதில் உள்ளனர். இளையவர் அவரது மனைவியை கீழே தள்ளி தாக்குகிறார்.
பின்னர் அந்தப் பெண்ணை ஒரு படுக்கையில் அவர் தள்ளுகிறார். அந்தப் பெண் பதிலளிக்க எழுந்த போதும் அந்த வயதான மனிதர் அவரைக் கைகளால் தடுத்து நிறுத்தி மீண்டும் படுக்கையில் தள்ளுகிறார். இந்த நிலையில் மூவரின் பிடியிலிருந்து அந்தப் பெண் விலகிச் செல்ல முயற்சி ெசய்கிறார். ஆனால் மூவரும் அந்த பெண்ணுடன் கோபத்துடன் பேசுகின்றனர். அந்தப் பெண் முன்னாள் நீதிபதியின் மருமகள் சிந்து என கூறப்படுகிறது.
மற்றொரு காணொளியில் சிந்துவை அந்தக் குடும்பம் வெளியே இழுத்து வருகிறது. இது நள்ளிரவில் நடக்கிறது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் சோர்வாகவும் பலவீனமாகவும் காணப்பட்டார்.
நீதிபதி நூட்டி ராமமோகன ராவ் ஐதராபாத் உயர் நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றியவர். 2017ல் அவர் ஓய்வு பெற்றார்.
கடந்த ஏப்ரல் மாதம், திரு ராமமோகன ராவ், அவரது மனைவி நூட்டி துர்கா ஜெயலக்ஷ்மி, அவர்களது மகன் நூட்டி வசிஸ்டா ஆகியோர் வரதட்சணை கோரி தன்னைத் தாக்கியதாக சிந்து சர்மா குற்றம் சாட்டியிருந்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ சான்றிதழ்படி சிந்துவின் இடது பக்க மார்பில் கீறல்கள், இடது மார்பகம் மற்றும் மேல் உதட்டின் மீது சிராய்ப்புகள் மற்றும் அவரது வலது தோள்பட்டை மற்றும் வலது முன்கையில் காயங்கள் இருந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய எம்பிஏ பட்டம் பெற்ற சிந்து, "நான் எனது பெற்றோரின் வீட்டுக்குச் சென்றேன், ஏப்ரல் 26 அன்று நான் போலிசில் புகார் அளித்தேன். ஏப்ரல் 27 அன்று நான் அவர்களின் வீட்டிற்கு வெளியே தர்ணாவில் அமர்ந்தேன். இப்போது எனது குழந்தைகளைத் திரும்பப் பெற விரும்புகிறேன்," என்றார்.

