வீட்டுக் காவலில் உள்ள மெஹபூபாவின் டுவிட்டர் கணக்கை இயக்கும் மகள்

வீட்டுக் காவலில் உள்ள மெஹபூபாவின் டுவிட்டர் கணக்கை இயக்கும் மகள்

2 mins read

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் டுவிட்டர் கணக்கு 46 நாட்களுக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

அவரது மகள் இல்திஜா இந்த டுவிட்டர் கணக்கை இயக்கி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிவித்தார்.

இதையடுத்து பாதுகாப்பை முன்னிட்டு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா, தனது தாயாரை சந்தித்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டதால் உடனடியாக ஸ்ரீநகருக்குச் சென்று அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, தாயார் முப்தியை சந்திக்க இல்திஜாவுக்கு அனுமதி வழங்கியது.

கடந்த வாரம் பலத்த பாதுகாப்புக்கு இடையே மெஹபூபா முப்தியை இல்திஜா சந்தித்துப் பேசினார்.

இதைத்தொடர்ந்து 46 நாட்களுக்குப் பின்னர் மெஹபூபா முப்தியின் டுவிட்டர் கணக்கு செயல்படத் தொடங்கியுள்ளது.

அவரது மகள் இல்திஜா இந்த டுவிட்டர் கணக்கை இயக்குவதாக அறிவித்துள்ளார்.

ேமலும் 'காஷ்மீரில் மூத்த அரசியல் தலைவர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித தகவல் தொடர்பு சேவையும் கிடைக்கவில்லை. இதனால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. இவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும்' என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.