மோடி: இந்திய-அமெரிக்க உறவில் புதிய மைல்கல்

மோடி: இந்திய-அமெரிக்க உறவில் புதிய மைல்கல்

2 mins read
9d2a16b4-292c-4e43-8648-7db3ce17015b
பிரதமர் மோடி பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் விமானம் தரை இறக்கப் பட்டது. அப்போது தூதர், அதி காரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் கோளாறு சரி செய்யப் பட்டு 2 மணி நேரத்திற்குப் பிறகு திரு மோடி அதே விமானத்தில் புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம்: இந்திய ஊடகம் -

புதுடெல்லி: அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இரு தரப்பு உறவு புதிய மைல்கல்லாக விளங்கும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக திரு மோடி டுவிட்டரில் பதிவிட்ட தகவலில், "ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா நடத்தும் காந்தியின் பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

"குளோபல் கோல்கீப்பர் என்ற விருது வழங்கும் பில்கேட்சின் அமைப்புக்கு நன்றி. பல நாட்டு தலைவர்களுடன் உரையாடு வதற்கான நல்வாய்ப்பாக அமெரிக்க சுற்றுப்பயணம் அமையும்.

"அமெரிக்க பயணத்தின் போது அங்குள்ள இந்தியர்களையும் அதிபர் டிரம்ப்பையும் சந்திக்க உள்ளேன். "இதன் மூலம் இரு நாட்டு உறவுகள் மேம்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

டெக்சாசில் வாழும் இந்தியர்கள் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' எனும் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் மோடியுடன் இணைந்து அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார். அதன்பின், இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

இதற்கிடையே மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 24ஆம் தேதி 'தலைமையின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த சிலரும் பங்கேற்கின்றனர்.

நியூயார்க்கில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும் ஐநா சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு உலகத் தலைவர்கள் மத்தியில் பேசுகிறார். ஐநா சபையில் உரையாற்றி விட்டு அன்றிரவு அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.

மற்றொரு நிலவரத்தில் அதிபர் டிரம்ப், திங்கட்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் பின்னர் செவ்வாய்க் கிழமை பிரதமர் மோடியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.