புதுடெல்லி: கடந்த வாரம் (செப்.17) இரவு 7.30 மணியளவில் ஏஐ467 என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லியிலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்படும்போதே மோசமான வானிலை இருந்தது. எனினும் இந்த விமானம் இரவு 9.40க்கு விஜயவாடாவைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உரிய நேரத்தில் சென்றடையாமல் இடி, மின்னல், மழை காரணமாக மிகவும் தாமதமாகச் சென்றடைந்ததாகவும் இடையில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
அபாயத்தை எதிர்கொண்ட இந்தச் சம்பவம் குறித்து அது நடந்தபோதே விமானப் பாதுகாப்புத் துறைக்கு ஏன் எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேபோல இன்னொரு சம்பவமும் அதேநாளில் நடந்தது. ஏர்பஸ் 321 விமானத்தில் ஏ.ஐ. 048 என்ற விமானம் டெல்லியில் இருந்து கொச்சினுக்குச் சென்று கொண்டிருந்தபோது மோசமான வானிலையை எதிர்கொண்டது. அப்போது கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததால் விமானம் வேகமாக இயக்குவதில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.
ஆனால், விமானி உடனடியாக இந்தச் சம்பவத்தை விமானப் பாதுகாப்புத் துறைக்கு தெரிவித்தார். இந்த இரு சம்பவங்களையும் விமான பாதுகாப்புத் துறை தீவிரமாக விசாரித்து வருவதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

