ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு: எரிசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு: எரிசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

2 mins read
a59891af-4715-49c9-bf1c-e0675ff26307
படம்: சமூக ஊடகம் -

ஹூஸ்டன்: பிரதமர் மோடி 7 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நகரில் இறங்கியவுடன் முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய மோடி இந்தியாவில் முதலீடு செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

எரிசக்தி மையாகத் திகழும் ஹூஸ்டன் நகரில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வட்டமேசை கூட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய 16 எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இரு நாடுகளுக்கு இடையிலான எரிசக்தித் திட்டங்களை ஊக்கப்படுத்தவும் மோடி அழைப்பு விடுத்தார்.

அதன் பயனாக இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனமும் அமெரிக்காவின் இயற்கை எரிவாயு நிறுவனமான டெலுரியனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. 50 லட்சம் டன் அளவுக்கு எல்என்ஜி வாயுக்கான முதலீடுகளை அளிப்பது குறித்து இந்த ஒப்பந்தத்தில் முடிவானது.

இந்த ஒப்பந்தத்துக்கு மோடி கைதட்டி வரவேற்பு தெரிவித்தார். 2020 மார்ச் 31ஆம் தேதிக்குள் இது இறுதி ஒப்பந்தமாக மாற்றப்படவேண்டும் என்று இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஹூஸ்டன் நகரில் எனர்ஜி காற்பந்து மைதானத்தில் 'ஹவுடி மோடி' என்னும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கலந்துகொள்வதற்காக இந்நிகழ்ச்சியை இந்திய அமெரிக்கர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்னதாக, சனிக்கிழமை ஹுஸ்டன் நகருக்கு வந்து சேர்ந்த மோடியை விமான நிலையத்தில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ஜென் ஜஸ்டர், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்சவர்தன் சரிங்களா ஆகியோர் வரவேற்றனர்.

இந்திய தூதரக உயர் அதிகாரிகளும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களும் விமான நிலையத்தில் பூங்கொத்து தந்து பிரதமர் மோடியை வரவேற்றனர். தூதரக பெண் அதிகாரி ஒருவர் மோடியிடம் தந்த பூங்கொத்தில் இருந்து ஒரு பூ கீழே விழுந்துவிட்டது. அதனைக் கவனித்த மோடி உடனே கீழே குனிந்து பூவை எடுத்து தனக்குப் பின்னால் இருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் கொடுத்தார்.

மோடியின் இந்த நடவடிக்கை அங்கு கூடியிருந்தோரின் பாராட்டுகளைப் பெற காரணமாக அமைந்தது. மோடி எல்லாரிடத்திலும் தூய்மையைப் பேணுவதில் முன்னணியில் இருக்கிறார். முதலில் செயல்

படத் தயாராக இருக்கிறார் என்ற உணர்வை அங்கு கூடியிருந்த அதிகாரிகளும் அமெரிக்க இந்தியர்களும் பெற்றதாக ஊடகச் செய்திகள் கூறின.