தொடர்ந்து உயரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

தொடர்ந்து உயரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

2 mins read
08ab9086-f767-46ca-904c-47529d0696fb
கோப்புப்படம் -

புதுடெல்லி: இந்தியர்களின் சமையலில் வெங்காயத்தின் பயன்பாடு மிகவும் அதிகம். இப்போது இந்த வெங்காயத்தின் விலை தினமும் கடகடவென்று உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டு வருகிறது.

இந்த அளவுக்கு வெங்காயம் விலையேறியதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர். நாட்டின் தற்போதைய வெங்காயத் தட்டுப்பாடு, விலையுயர்வு தொடரும் என வேளாண் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேநிலை நீடித்தால், இன்னும் சில நாட்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயைக் கடந்து விடக்கூடும் என ஏழை மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெங்காயத்தை விளைவிக்கும் முக்கிய மாநிலங்களான மகா ராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடர்மழை பெய்து வந்ததால் அங்கு வெங்காய விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டு, உற்பத்தி மிகவும் குறைந்து போனது.

இதன் எதிரொலியாக ரூ.70 முதல் ரூ.80 வரை வெங்காய விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வெங்காய வரத்து குறைவால் உயர்ந்துள்ள வெங்காய விலை விரைவில் சீராகிவிடும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் சீராகாவிட்டால் வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு சந்தையின் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சௌந்தரராஜன் கூறுகையில்,

"மராட்டிய மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் விளைச்சல் செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.

"சென்னை கோயம்பேடு சந்தையின் ஒட்டுமொத்த தேவையில் 80% வெங்காயம் இங்கிருந்துதான் கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவாக இருப்பதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

"தற்போது ஒரு கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. இன்னும் 3 மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை. தீபாவளி நேரத்தில் ஒரு கிலோ ரூ.60 வரை செல்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது," என்றார்.