திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வர்கீஸ் உம்மன் என்பவர் ஈராண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முன்பு ஒரு தெருநாயைக் கண்டார். அதன் மீது அன்பு கொண்ட அவர், அதற்கு 'ஷேடோ' எனப் பெயரிட்டதோடு தினமும் அதே இடத்தில் உணவு வழங்கத் தொடங்கினார்.
சுற்றுலாத் துறையில் பணிபுரியும் அவர், அடிக்கடி வெளியூருக்குச் செல்ல நேர்ந்ததால் ஷேடோவின் பசியைப் போக்க அவர் வித்தியாசமான வழி ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்.
ஷேடோவின் பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கி அதற்கான உணவை இணையம் வழியாக வாங்கினார். உணவு விநியோகிக்க வருபவர்கள் திரு வர்கீசுடன் தொடர்புகொண்டு விநியோகிக்க வேண்டிய விலாசம், நபரைப் பற்றிக் கேட்டால், வழக்கமான இடத்தில் காத்திருக்கும் ஷேடோவுக்கு கொடுக்கச் சொல்லி விடுகிறார்.
அருகில் இருக்கும் குடியிருப்பின் காவலர் ராதாகிருஷ்ணன், உணவுப் பொட்டலத்தைப் பிரிப்பதற்கு உதவி வருகிறார். ஷேடோவுக்கு தண்ணீரும் அவர் தருகிறார்.
கண்ட உணவுகளையும் ஷேடோ சாப்பிடுவதில்லை என்று குறிப்பிடும் திரு வர்கீஸ், பிரியாணிதான் ஷேடோவின் விருப்பமான உணவு என்கிறார்.
திரு வர்கீசை அடையாளம் கண்டுகொள்கிறது ஷேடோ. தாம் முன்பு குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பை காலி செய்தபோதும், ஷேடோவுக்காக அருகிலேயே வீடு பார்த்தார் அவர்.
ஷேடோவின் குட்டிகளையும் பாதுகாத்து அவற்றை பாதுகாப்பாக வளர்ப்பவர்களுக்கு வழங்கியுள்ளது திரு வர்கீசின் குடும்பம்.


