பெங்களூரு: கர்நாடகாவில் விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கப்போவதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இனி தனித்துப் போட்டி என்று எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
"இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதே இலக்கு. 15 தொகுதிகளிலும் உள்ளூர் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
"வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்," என்றார் குமாரசாமி.
கர்நாடகாவில் அக்டோபர் 21ஆம் தேதி அன்று, 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் இம்முறை தனித்து போட்டியிடுகின்றன.

