புதுடெல்லி: மத்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவி நாவல் சிங்கலுக்கு வருமான வரித்துறையினர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகள் தொடர்பில் சில விளக்கங்களை கேட்டிருப்பதாகவும், இது வழக்கமான நடைமுறைதான் என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியரான நாவல் சிங்கல், கடந்த 2005ஆம் ஆண்டு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
பின்னர் அவர் பல நிறுவனங்களில் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரியாக அசோக் லவாசா பொறுப்பில் இருந்தபோது அவரது அதிகாரத்தை நாவல் சிங்கல் தவறாகப் பயன்படுத்தினாரா எனும் விவாதம் எழுந்துள்ளது.
எனினும் தாம் முறையாக வருமான வரி செலுத்தி வந்திருப்பதாக சிங்கல் தெரிவித்துள்ளார்.
"எனது வருமானம் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்துள்ளேன். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு வந்த அனைத்து வருமானவரித்துறை நோட்டீசுகளுக்கும் முறையாக பதில் அளித்துள்ளேன்," என்றும் நாவல் சிங்கல் மேலும் தெரிவித்துள்ளார்.

