பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்குள் ஆளில்லா வானூர்திகள் மூலம் ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் (படம்) வேண்டுகோள் விடுத்து
உள்ளார்.
பஞ்சாப்பில் முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் டார்ன் டாரன் மாவட்டத்தில் ஐந்து பயங்கரவாதிகளை போலிசார் அண்மையில் கைது செய்தனர்.
அவர்கள் ஜெர்மனி மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் காலிஸ்தான் ஸிந்தாபாத் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரியவந்தது.
இம்மாதம் 9ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடையில் குறைந்தது எட்டு ஆளில்லா வானூர்திகள் கிட்டத்தட்ட 80 கிலோ கிராம் எடையுள்ள ஆயுதங்களை ஏந்தி பஞ்சாப்பிற்குள் ஊடுருவியதாக பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் விநியோகிக்கப் பட்டதாக அவர்கள் கூறினர்.
ஆயுத விநியோகத்தில் சீன நாட்டு ஆளில்லா வானூர்தி பயன்
படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்களின் பயன்பாட்டுக்காகவே இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆயுதங்களை அனுப்ப பயன்படுத்தப்பட்ட கடைசி வானூர்தி, பாகிஸ்தான் எல்லையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது. அது கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே சந்தேக நபர்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில், ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா வானூர்தி மூலம் பஞ்சாப்பிற்குள் கொண்டுவரப்படு வது தெரியவந்தது.
பஞ்சாப் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் தொடர் தாக்குதல்கள் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
இந்திய ராணுவத்தில் கேப்ட னாக பணியாற்றிய அமரிந்தர் சிங், இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் குறிப்பிட்டுள்ளதாவது, "ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புதுப்புது உத்திகளைக் கையாளத் துவங்கி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஆளில்லா வானூர்திகள் மூலம் ஆயுதங்களை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் விரைவாக செயல்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

