ரூ.25,000 கோடி ஊழல்: சரத்பவார் மீது வழக்கு

ரூ.25,000 கோடி ஊழல்: சரத்பவார் மீது வழக்கு

2 mins read
cc30ea1b-7f42-4e16-a45d-e9a1581e8e20
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வலது), அவரது உறவினரும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் உள்ளிட்டோருக்கு எதிராகச் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. படம்: ஊடகம் -

மும்பை: மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் 25,000 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது உறவினரும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் உள்ளிட்டோருக்கு எதிராகச் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், அண்மையில் காங்கிரசுடன் கைகோர்த்தது.

சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு முக்கிய எதிர்தரப்பு இந்தக் கூட்டணிதான். இதனிடையேதான் சரத் பவாரின் நெருங்கிய நண்பரும் முன்னாள் சிவில் விமானத்துறை அமைச்சருமான பிரபுல் படேல் ஏற்கெனவே ஏர் இந்தியா ஊழலில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி இயக்குநராக அஜித் பவார் பதவி வகித்த காலத்தில் சர்க்கரை ஆலைகளுக்குக் கடன் கொடுக்கப்பட்டதில் ரூ.25,000 கோடி மோசடி நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மும்பை உயர் நீதிமன்றத்தில் சுனில் அரோரா என்பவர் 2015ஆம் ஆண்டில் பொதுநல மனு தொடுத்தார்.

அதில் சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோரின் பெயர்களைக் குறிப்பிட்டு மகாராஷ்டிர கூட்டுறவு வங்கிக்கு 25,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தி விட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

சரத் பவாரின் அறிவுறுத்தலின்பேரில் வங்கியில் முக்கிய பொறுப்புகளை வகித்த பலர் திட்டமிட்டு செயல்பட்டு இதை செய்ததாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சுனில் அரோரா அந்த மனுவில் கோரியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யும்படி மும்பை காவல்துறையின் பொருளியல் குற்றப்பிரிவுக்குக் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து மும்பை காவல்துறையின் பொருளியல் குற்றப்பிரிவு சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. அதை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சரத் பவார், அஜித் பவார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவுசெய்தது.

சரத் பவாரின் 55 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறைஎன்று கூறப்படுகிறது.