ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி பள்ளி இடைவேளை நேரத்தில் வெளியே சென்ற போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று ஓர் அறையில் அடைத்து வைத்து 4 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
காவல் விசாரணையில் மாணவியைக் கற்பழித்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த யெஷ்வீர், பஞ்சாப்சிங் என்பது தெரியவந்தது. இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தோல்பூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதானவர்களுக்கு 'போக்சோ' நீதிமன்றம் பிணை வழங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
அதில், தனது மகள் கற்பழிப்பு வழக்கில் கைதான வாலிபர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்துச் செய்ய வேண்டும் எனக் கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தில் கற்பழிப்பு வழக்கில் கைதானவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்துச் செய்து உத்தரவிட்டனர். மேலும் கைதானவர்களுக்குப் பிணை வழங்கிய நீதிபதிக்குக் கடும் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது.

