ஹைதராபாத்: நடைப்பயிற்சி இயந்திரத்தில் (டிரெட்மில்) நடந்தபடியே ஓவியம் தீட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த இளம் ஓவியர் ஹர்ஷா.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களை அவர் ஓவியமாகத் தீட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்திய சாதனைப் புத்தகம், லிம்கா புத்தகம், கின்னஸ் புத்தகம் ஆகியவற்றில் தமது சாதனை இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களை ஓவியமாகத் தீட்டியது மனநிறைவைத் தருகிறது. டிரெட்மில் இயந்திரத்தில் சுமார் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டபடி இந்த ஓவியங்களைத் தீட்டினேன்," என்று சொல்லும் ஹர்ஷா, அண்மையில் துபாய் தேசிய தின நிகழ்வையொட்டி அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அந்நிகழ்வின் போது துபாய் மன்னரின் முன்னிலையில் நேரடியாக அவரது உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
இதையடுத்து மிக வேகமான இந்திய ஓவியர் என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
"கடந்த 2012ஆம் ஆண்டிலேயே எனது பெயர் இந்திய சாதனைப் புத்தகத்திலும், கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. அச்சமயம் 24 மணி நேரத்தில் 507 போர்டிரேட் ஓவியங்களை ஒரு நிமிடம் கூட இடைவெளி இன்றி வரைய முற்பட்டேன். உணவருந்த அல்லது கழிவறைச் செல்வதற்கு கூட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை," என்கிறார் ஹர்ஷா.
அடுத்தக்கட்டமாக இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் ஓவியமாகத் தீட்டப் போவதாக குறிப்பிடுபவர், இம்முறையும் லண்டனில் நடைபெறும் நிகழ்வில் நடைப்பயிற்சி இயந்திரத்தில் நடந்தபடியே தான் சாதனை படைக்கப் போவதாகச் சொல்கிறார்.
மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை ஒரே நிமிடத்தில் ஓவியமாகத் தீட்ட வேண்டும் என்பதும் இவரது விருப்பம் என்கிறார்.

