போபால்: முக்கியப் பிரமுகர்களை குறிவைத்து பாலியல் மோசடியில் ஈடுபட்ட கும்பலை மத்திய பிரதேச போலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி மூலம் கோடிக்கணக்கில் அந்தக் கும்பல் பணம் பறித்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட அந்தரங்க காணொளிப் பதிவுகளை போலிசார் கைப்பற்றி இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த இளம் பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைதாகியுள்ள நிலையில், மேலும் சிலர் சிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசு தொடர்புடைய உதவிகள் பெறுவதற்காக பாலியல் உறவுக்கு ஒப்புக்கொள்வது போல் நடித்து இளம் பெண்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சபலமடைந்து அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், முக்கியப் புள்ளிகள் எனப் பலரும் அப்பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது.
இதைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் அந்த மர்மக் கும்பல் உல்லாசக் காட்சிகளை புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் அவற்றைக் காண்பித்து மிரட்டல் விடுத்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.
இவ்வாறு சபலப்பட்டு மோசடி வலையில் சிக்கிய அரசு அதிகாரி ஒருவர் அண்மையில் போலிசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போது மோசடிக் கும்பல் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலிசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து ஐந்து பெண்கள், கார் ஓட்டுநர் என ஆறு பேரை கைது செய்த போலிசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் கைதானவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மடிக்கணினி மற்றும் பல்வேறு கைபேசிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆபாசப் படங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் ஆகியவற்றைக் கைப்பற்றி உள்ளனர்.
பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களின் காணொளிகளும் கிடைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், அவற்றுள் சில இணையதளங்களில் கசிந்துள்ளது. முக்கியப் பிரமுகர்கள் பலர் நட்சத்திர தங்கு விடுதிகள், பண்ணை வீடுகள் எனப் பல இடங்களில் இளம் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்திருப்பது தெரிய வந்துள்ளதாக போலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், பாலியல் ரீதியாக ஆதாயம் பெறுவதும் ஊழல் என்று வரையறுக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

