பெங்களூரு: அரசியல் பிரமுகர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பில் பெங்களூரு நகர முன்னாள் காவல்துறை ஆணையர் அலேக்குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஒட்டுக்கேட்பு நடவடிக்கை தொடர்பான தகவல்களை அவர் ஒரு பென்டிரைவில் சேமித்து வைத்து இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு அண்மையில் பாஜக ஆட்சி ஆட்சி அமைந்தது. எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக பாஜக முன்பு புகார் எழுப்பியது. பாஜக ஆட்சி அமைந்ததும் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
பாஜக, காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், உயரதிகாரிகள், எம்எல்ஏக்கள் என மொத்தம் 300 பேரின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்னாள் காவல்துறை ஆணையர் அலேக் குமார் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஒட்டுக்கேட்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது தலைமையிலான அரசு மீது வீண் பழி சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

