புதுடெல்லி: பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் தனி மனித வருமான வரி விகிதத்தை மத்திய அரசு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்குரிய பரிந்துரையை வரி விகிதம் தொடர்பாக உருவாக்கப்பட்ட பணிக்குழு மத்திய அரசிடம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
நாட்டில் தற்போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த வாரம் நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 10 விழுக்காடு அளவில் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தனி மனித வருமான வரியையும் அரசு குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பரிந்துரையால், அந்த வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மேலும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 10 விழுக்காடு அளவிலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 20 விழுக்காடு அளவிலும் வரி விதிப்பு மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகப் பொருளியல் நிபுணர்கள் கூறிவரும் நிலையில், மக்களின் வாங்கும் திறன் இதனால் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வரிவிகிதம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்்கைகளை மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.

