புதுடெல்லி: கேரளாவின் மராடு அடுக்குமாடிக் கட்டடத்தை 138 நாட்களுக்குள் இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளுக்கு முரணாக அந்தக் கட்டடம் எழுப்பப்பட்டதாகப் புகார் எழுந்து வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வாண்டு மே மாதம் 8ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டடத்தில் குடியிருப்போர் பேரிடர்களால் பாதிக்கப்படும் சாத்தியத்தைக் கூறி அதனை இடித்துத் தள்ள உத்தரவிட்டது. ஆனால் கட்டடத்தில் குடியிருப்போர் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர். அதனால் கேரள அரசு என்ன செய்வதென்று தெரியாது விழித்தது.
கட்டடத்தை இடிப்பதில் மாநில அரசு அசட்டையாக உள்ளதாக கடந்த திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது, வேறு வழியின்றி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான மின்சாரத்தையும் குடிநீர் விநியோகத்தையும் கேரள அரசு துண்டித்தது.
இதற்கு குடியிருப்பில் வசிப்போர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்குப் பின் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
மராடு அடுக்குமாடிக் குடியிருப்புகளை 138 நாட்களுக்குள் இடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் ஒவ்வொருவருக்கும் மாநில அரசு தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டுத் தொகையை அந்தக் கட்டடம் கட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் பின்னர் அரசு வசூலித்துக்கொள்ளலாம்.
அரசு இந்தக் கட்டடத்தை இடிக்க ஏற்பாடு செய்யாவிடில் அரசின் செலவில் அதனை இடித்துத் தர நீதிமன்றம் யாரையாவது நியமிக்கும்.
இதனை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் பணி யைப் பார்வையிடவும், இழப்பீடு தொடர்பாக முடிவெடுக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்," என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதிக்குள் கட்டடம் இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

