பாலியல் வலையில் விழுந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்

பாலியல் வலையில் விழுந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்

3 mins read
b82d795a-e16c-4a0c-8f72-e98f86268aa9
அரசியல்வாதிகள், முக்கிய அதிகாரிகளை பாலியல் வலையில் சிக்க வைத்து காரியத்தை சாதித்துக் கொண்ட கும்பலை இம்மாதம் 24ஆம் தேதி போலிசார் கைது செய்தனர். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

போபால்: கல்லூரி மாணவிகள், பாலிவுட் துணை நடிகைகள் மூலம் அரசியல் தலைவர்களையும் முக்கிய அதிகாரிகளையும் பாலியல் வலையில் விழ வைத்து மிரட்டிய பெண் கும்பலிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முக்கிய பிரமுகர்களை பாலியல் வலையில் சிக்க வைப்பதற்காக நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வருகிறது.

பாலியல் வலையில் முன்னாள் மாநில முதல்வர், முன்னாள் ஆளுநர், முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. பெண்களுடன் முக்கிய பிரமுகர்கள் இருக்கும் வீடியோ படங்களை எடுத்து தங்களுடைய காரியத்தை சாதித்துக் கொண்ட சம்பவத்தில் மொத்தம் ஐந்து பெண்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய நபரான சுவேதா ஜெயினிடம் விசாரணை மேற்கொண்டதில் பல ரகசிய தகவல்கள் வெளியாகியிருப்பதாக போலிசார் தெரிவித்தனர்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூரில் சமூக சேவை நிறுவனம் ஒன்றை நடத்திவந்த சுவேதா ஜெயின், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளார்.

இந்த விவகாரம் பற்றிய தகவல் போலிசாருக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து போலிஸ் கூடுதல் டிஜிபி சஞ்சீவ் சமி மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் விசாரணையில் மிகப்பெரிய அளவில் சுவேதா ஜெயின் பாலியல் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் அவரது வலையில் வீழ்ந்துள்ளனர். கல்லூரி மாணவிகள், அழகிகளுடன் அதிகாரி மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கியிருப்பதை ரகசியமாக வீடியோ படம் எடுத்து அவர்களை மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார்.

பாலியல் வலையில் வீழ்த்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மூலமாக அரசு ஒப்பந்தங்களைப் பெறுவது மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் பெற்றுத் தந்து பணம் பெறுவது என பலவற்றையும் அவர் செய்துள்ளார்.

சுவேதா ஜெயினுக்கு உதவியாளராக ஆர்த்தி தயாள் என்ற பெண் செயல்பட்டு வந்தார். ஆர்த்தி தயாள் ஒரு முறை மோனிகா என்ற மாணவியை இந்தூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று தங்க வைத்தார்.

அப்போது அரசு பொறியாளரான 60 வயது ஹர்பஜன் சிங்கை அந்த ஹோட்டல் அறைக்கு வரவழைத்தனர். அன்று இரவு மோனிகாவுடன் ஹர்பஜன்சிங் தங்கினார். அவர்கள் ஒன்றாக இருந்ததை ஆர்த்தியும் ரூபா என்ற பெண்ணும் ரகசியமாக படம் பிடித்தனர்.

பின்னர் இந்த வீடியோ படத்தைக் காட்டி ஹர்பஜன் சிங்கிடம் ரூ.3 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது பற்றி முழுமையான தகவல்களை திரட்டிய போலிசார் தொடர்ந்து விசாரித்ததில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள், 8 முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் சுவேதா ஜெயின் வலையில் சிக்கியது தெரியவந்தது.

இன்னும் ஏராளமான உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோரும் அவரது வலையில் சிக்கியுள்ளனர். சுவேதா ஜெயின் மொத்தம் 24 மாணவிகளை இவ்வாறு விருந்தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும், 40 பாலியல் தொழில் அழகிகளை நிரந்தரமாக தன்னுடன் வைத்திருந்தார். அவர்களையும் ஆங்காங்கே அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.

சுவேதா ஜெயினிடம் இருந்து ஏராளமான பாலியல் காணொளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்தியப்பிரதேச மாநிலத்தையே உலுக்கியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பில் சுவேதா விஜய் ஜெயின், சுவேதா சுவப்னில் ஜெயின், பர்க்கா, ஆர்த்தி தயாள், மோனிகா யாதவ் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவேதா விஜய் ஜெயின், சுவேதா சுவப்னில் ஜெயின், பர்க்கா ஆகியோரை வரும் 30ஆம் தேதி வரையிலும் ஆர்த்தி தயாள் மற்றும் மோனிகா யாதவ் ஆகியோரை அக்டோபர் முதல் தேதி வரையிலும் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.