புனே: மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள், அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது தமிழக மக்கள் அவரது அஸ்திக்கு செலுத்திய இறுதி அஞ்சலி உட்பட 30 ரீல்கள் அளவிலான ஆவணப்படம் கிடைத்து உள்ளதாக இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் தெரி வித்துள்ளது.
வெளிநாடுகளில் முன்னர் இருந்த பிரசித்தி பெற்ற படத் தயாரிப்பு நிறுவனங்களான பாரமவுண்ட், வார்னர், யூனிவர்சல், பிரிட்டிஷ் மூவிடோன் உள்ளிட்ட ஸ்டுடியோ ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பல்வேறு தனிநபர்களிடம் இருந்து இந்த அரிய ஆவணப்பட தொகுப்பு கிடைத்துள்ளதாக அதன் இயக்கு நர் பிரகாஷ் மக்டும் தெரிவித் தார்.
சுட்டுக் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் அஸ்தி மதராஸ் பட்டினத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டபோது செட்டிநாடு, சிவகங்கை, சிதம்பரம், மானாமதுரை, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கண்ணீர் மல்க மக்கள் அஸ்தி கலசத்தை வணங்கி வழிபாடு செய்த 30 நிமிட காட்சியும் இந்த தொகுப்பில் அடங்கியுள்ளது.
"மகாத்மா காந்தியின் இரண்டாம் மகன் மணிலால் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சவர்க்கார் ஆகியோர் காந்தியுடன் தோன்றும் காட்சிகள், மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா பகுதியில் உள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் மனைவி கஸ்தூரிபாயுடன் காந்தி விவசாயப் பணிகள் செய்யும் காட்சி, ராஜாஜி யுடன் மணப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி மற்றும் கும்பகோணம் கோவில்களுக்கு செல்லும் காட்சி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டில் அவர் சுற்றுப்பயணம் செய்தபோது அந்நாட்டு ஊடகங்கள் படம்பிடித்த காட்சிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
"மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வேளையில் இந்த படங்கள் நமக்கு கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாகும்," என்று திரு பிர காஷ் மக்டும் தெரிவித்தார்.

