சுஷ்மாவின் ஆசையை நிறைவேற்றிய மகள்

சுஷ்மாவின் ஆசையை நிறைவேற்றிய மகள்

2 mins read
9059a488-6b72-486e-8e2b-d330e95c88f9
தமது தாயாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதத்தில் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சுரி ஸ்வராஜ், வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை நேற்று நேரில் சந்தித்து ஒரு ரூபாயை அளித்து கௌரவித்தார். படம்: ஊடகம் -

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவுக்காக அனைத்துலக நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாதாடிய வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேவுக்கு ஒரு ரூபாயை கட்டணமாக வழங்கி கௌரவிக்க வேண்டும் என்ற முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலஞ்சென்ற சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ஆசையை அவரது மகள் பன்சுரி ஸ்வராஜ் நேற்று நிறைவேற்றினார்.

இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் ராணுவ ரகசியங்களை உளவுப் பார்த்ததாக கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அனைத்துலக நீதிமன்றத்தில் இந்தியா மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்திருந்த தூக்குத் தண்டனைக்கு தடை விதித்தது.

மேலும் அவர் சட்டரீதியான ஆலோசனைகளைப் பெற வழக்கறிஞர் ஒருவரை இந்தியா நியமிக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து குல்பூஷண் ஜாதவ் வழக்கில் முன்னிலையான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே அனைத்துலக நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடி குல்பூஷன் ஜாதவின் உயிரைக் காப்பாற்றினார்.

அப்போது இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்த மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை கௌரவப்படுத்த வேண்டும் என விரும்பி னார்.

இதனால் ஆகஸ்டு மாதம் 6ஆம் தேதி இரவு 8:50 மணியளவில் சால்வேயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர் சுஷ்மா, "ஜாதவ் வழக்கில் சிறப்பாக வாதாடிய உங்களுக்கு வழக்கறிஞர் கட்டணமாக ஒரு ரூபாயை தந்து கௌரவிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனை நாளைக்கு வந்து பெற்றுக் கொள்ளுங்கள்," என கூறியுள்ளார்.

"அந்த மதிப்புமிக்க தொகையை நாளை நிச்சயம் வந்து உங்களிடம் வாங்கிக் கொள்கிறேன்," என ஹரீஷ் சால்வே உறுதியளித்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவே மாரடைப்பு காரணமாக சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்.

இந்த நிலையில் தமது தாயாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதத்தில் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சுரி ஸ்வராஜ், வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை நேற்று நேரில் சந்தித்து ஒரு ரூபாயை அளித்து கௌரவித்தார்.

இதனை சுஷ்மா ஸ்வராஜின் கணவரும் மிசோரம் மாநில முன்னாள் ஆளுநருமான ஸ்வராஜ் கவுசல் டுவிட்டர் பதிவி்ல் தெரி வித்தார்.