- சென்னையிலிருந்து தமிழவேல், செய்தி ஆசிரியர்
தமிழகத்தின் சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் இரண்டாவது சிங்கப்பூர்-இந்தியா கூட்டு 'ஹேக்கத்தான்' தொழில்நுட்பப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய முதல் தொழில்நுட்பப் போட்டி கடந்த ஆண்டு சிங்கப்பூரின் என்டியுவில் நடைபெற்றது.
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த இந்தப் போட்டிக்கு அவரே சிறப்பு விருந்தினராக அப்போது சிங்கப்பூர் வந்திருந்தார். இந்த ஆண்டு ஐஐடி மெட்ராஸில் நடைபெறும் இரண்டாவது 'ஹேக்கத்தான்' போட்டியின் பரிசளிப்பு விழாவில் திரு ஓங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியில் திரு மோடியும் பங்கேற்கிறார்.
என்டியு, இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சு, தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய மன்றம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த 'ஹேக்கத்தான்' போட்டி சிங்கப்பூர், இந்தியாவைச் சேர்ந்த 120 பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைக்கிறது. அவர்கள் புத்தாக்க வழிமுறைகளையும் கல்வி, சுகாதாரம், பசுமை ஆகிய துறைகளில் உள்ள சவால்களைச் சமாளிக்கும் தீர்வுகளையும் கண்டுபிடிப்பார்கள்.
இரவு, பகல் என்று இரண்டு நாட்களுக்கு மாணவர்கள் குழுக் களாக இதில் பங்கேற்பார்கள். சென்னைக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஓங், தமிழகத்தின் அரசாங்க, அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் இணையக் கல்வித் திட்டத்தைப் பார்வையிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுர சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் அவர் சென்று காண்பார்.
சிங்கப்பூரின் உயர்நிலைத் தமிழ்ப் பாட நூல்களில் இடம்பெற்றுள்ள மாமல்லபுரம் சிற்பங்களை அமைச்சர் பார்வையிடுவது இதுவே முதல் முறை. அமைச்சருடன் சிங்கப்பூர் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் உடன் செல்வர்.ஐஐடி மெட்ராஸ் ஹேக்கத்தான் போட்டியின் பரிசளிப்பு விழாவிலும் சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்ள திரு மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று திங்கட்கிழமை சென்னை வருகிறார்.
விழா நடைபெறும் சென்னை ஐஐடி வளாகத்துக்கு விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி வந்து சேருவார் என தெரி விக்கப்பட்டுள்ளது.

