புதுடெல்லி: வெங்காயத்தின் விலை தொடர்ந்து அபாயகரமாக அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
பண்டிகை காலம் நெருங்குவதால் வெங்காயத்தைப் பதுக்கி வைத்து கூடுதல் தொகைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அண்மைய சில வாரங்களாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதோறும் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இம்மாநிலங்களில் பருவமழையும், அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் அதிகரித்ததால் வெங்காய விளைச்சல் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால் நாட்டின் பிற பகுதிகளின் தேவைக்கேற்ப வெங்காயத்தை அனுப்ப முடியவில்லை.
இதன் எதிரொலியாக சென்னை, டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை இருமடங்காக உயர்வு கண்டது. மேலும், அண்மைய சில தினங்களாக ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில் பண்டிகைக் காலம் நெருங்குவதால் சில தரப்பினர் வெங்காயத்தைப் பதுக்கி அவற்றைக் கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.
இதன் உச்சமாக நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 2 கோடி டன் வெங்காயம் உற்பத்தி ஆகிறது. அவற்றுள் 20 லட்சம் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வெங்காய விளைச்சலில் உலகளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.

