மோடி: சாதனைகள் படைத்த பெண்களை அனைவரும் சேர்ந்து கௌரவிக்கவேண்டும்

மோடி: சாதனைகள் படைத்த பெண்களை அனைவரும் சேர்ந்து கௌரவிக்கவேண்டும்

2 mins read
d6d8c44f-5391-4dfd-be1c-260cf8a7d39d
-

புதுடெல்லி: சாதனை படைத்த பெண்களை அனைவரும் சேர்ந்து கவுரவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், நேற்று முன்தினம் அவ்வாறு உரையாற்றுகையில், இந்தியாவின் மகள்களைப் பெருமைப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

"இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது கடவுள் லட்சுமியை புதிய வழியில் வரவேற்போம். சாதனை படைத்த பெண்களின் திறமை, வலிமையை 'நாரி சக்தி' என்ற பெயரில் கொண்டாடுவோம்," என்றார் பிரதமர் மோடி.

இளையர்கள் புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

புகையிலைப் பழக்கமானது ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்றார் பிரதமர்.

மேலும் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் 90வது பிறந்தநாளை ஒட்டி இந்த நிகழ்ச்சியினூடே தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார். லதா மங்கேஷ்கருடனும் அவர் உரையாடினார்.

முன்னதாக அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அச்சமயம் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா தொடர்பான உலகின் பார்வையிலும், உலகத் தலைவர்களின் பார்வையிலும் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வதாகக் குறிப்பிட்டார்.

"இந்தியா மீதான நன்மதிப்பு குறிப்பிடப்பட்ட அளவு உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் 130 கோடி மக்களும் சேர்ந்து வலிமையான, நிலையான அரசைத் தேர்ந்தெடுத்ததுதான்.

"கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நமது இந்தியப் படைகள் சென்று தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பின. நமது படைகள் திரும்பி வரும்வரை நான் தூங்கவில்லை.

"அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தேன். இந்த நாள் இந்திய வீரர்களின் துணிச்சலுக்குக் கிடைத்த வெற்றி நாள்," என்றார் பிரதமர் மோடி.