தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1¼ லட்சம் அரசுப் பணியாளர்களை ஒரே நாளில் நியமித்து ஆந்திர அரசு அதிரடி

2 mins read
4b7b7db1-7ed1-48b7-9846-eafc94671b2d
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் நியமன ஆணைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். படம்: தகவல் ஊடகம் -

இந்தியாவின் ஆந்திர மாநில அரசு ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நிரந்தர அரசு ஊழியர்களை நியமித்துள்ளது. அதற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார்.

கிராமங்களில் கிராம செயலகத்தையும் நகர்ப்புறங்களில் வார்டு செயலகத்தையும் ஆந்திர மாநிலம் உருவாக்குகிறது. இந்த செயலகங்களில் 500 வகையான பொதுச் சேவைகள் வழங்கப்படும். கிராமப்புறங்களில், பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு, வருவாய், மருத்துவம், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், வேளாண்மை, சமூக நலன் ஆகியவை தொடர்பான சேவைகளும் நகர்ப்புறங்களில் நகராட்சி தொடர்பான சேவைகளும் வழங்கப்பட உள்ளன. இங்கு பணியாற்றுவதற்கான நிரந்தர ஊழியர்களைத் தேர்வு செய்வதற்காக, கடந்த மாதம் மாநில அரசு எழுத்து தேர்வு நடத்தியது. 19,50,000 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 1,26,728 பேர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நியமன ஆணைகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டது, இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்று தமது உரையில் திரு ஜெகன் பெருமிதத்துடன் கூறினார்.

ஊழல் இல்லாமல் அரசு சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதை ஒரு வேலையாக மட்டும் கருதாமல் சேவையாகக் கருத வேண்டும் என்றார்.

இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து அவ்வப்போது தணிக்கை செய்யப்பட்டு, அதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப இனிமேல் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்