வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தானுடன் மட்டுமே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், இவ்விஷயத்தில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்தியா இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் சுட்டிக்காட்டினார்.
"இது யாருடன் தொடர்புள்ள விவகாரம்? இது எங்களுடன் சம்பந்தப்பட்டுள்ள விவகாரம் எனில், நாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் பிறருடைய மத்தியஸ்தம் தேவைப்படுகிறது எனில், அது குறித்தும் நாங்களே முடிவு செய்வோம்.
"இது தொடர்பாக உங்களுக்கு விருப்பமான எதையும் அளிக்க முன்வரலாம். ஆனால் எங்களுக்கு பொருத்தமானதாக இல்லையெனில் அதை ஏற்க இயலாது. இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது,'' என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் என அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ராஜதந்திரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் பாடம் எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "ஆப்கி பார், டிரம்ப் சர்க்கார்" (இந்த முறையும் டிரம்ப் அரசுதான்) என்று முழுக்கமிட்டு மக்களிடம் ஆதரவு கோரியதாக ஒரு தகவல் வெளியானது.
இதனால் அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிருப்தி அடைந்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எனினும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக இவ்வாறு குறிப்பிடவில்லை என்றும், பிரதமர் மோடி கூறியதை அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் திறமையின்மையை மறைக்க அமைச்சர் ஜெய்சங்கர் முயற்சிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
"பிரதமர் மோடியின் ஒரு சார்பு ஒப்புதலால் ஜனநாயக கட்சியினர் இந்தியாவுடன் கொண்டிருந்த இணக்கமான சூழலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கலைத் தீர்க்க நீங்கள் தலையிடுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விவகாரம் பற்றி பேசும் நீங்கள் பிரதமர் மோடிக்கு ராஜதந்திரம் குறித்து பாடம் எடுங்கள்," என்று ராகுல் கூறியுள்ளார்.
இதற்கிடையே, காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியுள்ளது என்றும், அங்கு ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை. மக்கள் அன்றாட பணிகளை செய்கின்றனர். அவர்களின் அவசியமான பணிகள் எதுவும் தடை செய்யப்படவில்லை. மக்கள் எங்கும் சுதந்திரமாக சென்று வருகின்றனர்,'' என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் காஷ்மீரில் அமைதி நிலவும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

