திருச்சி நகைக்கடை சுவரில் துளையிட்டு ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

திருச்சி நகைக்கடை சுவரில் துளையிட்டு ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

2 mins read
676c6994-4988-4342-ad9a-5744d39cf93b
-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத் திற்கு அருகே அமைந்துள்ள பிரபல லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் இருந்து ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையின் பின்புறம் குளிரூட்டி (ஏசி) இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பகலிலேயே அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது எனக் கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, 'ஏசி' இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள சுவரில் துளையிட்டு, உள்ளே புகுந்து இச்சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றி உள்ளனர். கீழ்த்தளத்தில் ஒரு குண்டுமணி தங்கத்தைக்கூட அவர்கள் விட்டுச்செல்லவில்லை எனச் சொல்லப்படுகிறது. நேற்று அதிகாலை 2.11க்கு கடையினுள் நுழைந்த அவர்கள், 3.15 மணி வரை அங்கிருந்தது கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது.

தங்களை மோப்ப நாய்கள் எதுவும் மோப்பம் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக வழிநெடுக மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டுச் சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களில் இருவர் உருவம் மட்டுமே பதிவாகி உள்ளது. அவர்கள் விலங்கு உருவம் பதித்த முகமூடிகளையும் கையுறைகளையும் அணிந்திருந்ததைப் பதிவான காணொளிகள் காட்டின.

கிட்டத்தட்ட நூறு கிலோ வரையிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என்றும் அவற்றின் மதிப்பு ரூ.50 கோடிக்கு மேல் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அவ்வளவு நகைகளை இருவர் மட்டுமே எடுத்துச் சென்றிருக்க முடியாது என்பதால் இந்தக் கொள்ளையில் மேலும் பலருக்குத் இதில் தொடர்பிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சுவரின் தடிமன் இரண்டு அடி என்பதால் ஒரே இரவில் துளையிட்டிருக்க முடியாது, பல நாட்களாகச் சிறுகச் சிறுகத் தோண்டி, அப்பகுதியை மறைத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அதற்குக் கடை ஊழியர்கள் எவரேனும் உதவியிருக்கலாம் என்றும் போலிஸ் சந்தேகிக்கிறது. ஏழு தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலிஸ் தேடி வருகிறது.