ஜெய்ப்பூர்: இந்தியாவின் தேசத் தந்தை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட போது, பிரதமர் நரேந்திர மோடி ஏன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார்.
காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படும் வேளையில் தமது எதிர்ப்பை பதிவுசெய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மகாத்மா காந்தி மீது பிரதமர் மோடிக்கு மதிப்பு இருக்கும் எனில் அதிபர் டிரம்ப் தம்மை தேசத் தந்தை என்று குறிப்பிட்ட போது, ஏன் மவுனம் காக்க வேண்டும்?
"அதிபர் டிரம்ப் கூறியது தவறு என்று பிரதமர் மோடி திருத்தியிருக்க வேண்டும். இந்தியாவின் தேசத் தந்தை என்றால் அது மகாத்மா காந்தி ஒருவர் மட்டும் தான். வேறு யாரும் அந்த இடத்தை எடுத்துக் கொள்ள இயலாது என பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் தெரிவித்திருக்க வேண்டும்," என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அண்மைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது பிரதமர் மோடியை இந்திய தேசத்தின் தந்தை என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். அதை பிரதமர் மோடி மறுக்கவில்லை என்பது தற்போது சர்ச்சை ஆகி உள்ளது.

