பீகார் மாநிலத்தில் பெய்துவரும் பருவமழையால் வெள்ளம் மட்டுமீறிப் பெருகி கடந்த மூன்று நாட்களில் 55 பேரைப் பலிவாங்கியுள்ளது. அத்துடன் சுமார் 21.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் பீகார் மாநில அரசு நேற்று தெரிவித்தது.
அவ்வாறு பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் ஒருவரின் துயரத்தை, இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்தக் காணொளி காட்டுகிறது.
பாட்னா நகரில் ரிக்ஷாக்காரர் தனது ரிக்ஷாவை விட்டு விலக முடியாமல் வெம்பிப்போவதைக் காட்டும் இந்தக் காணொளி, இணையவாசிகள் பலரைக் கண்ணீர் மல்க வைத்துள்ளது.
மார்பு வரை உயர்ந்த வெள்ள நீரோட்டத்திற்கு மத்தியில் அந்த ரிக்ஷாக்காரர் தனது ரிக்ஷாவை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தார். தனது ரிக்ஷாவைவிட்டுச் செல்ல மனமில்லாத அவர் அழத்தொடங்கினார்.
இவருக்காகத் தங்களது அனுதாபங்களை வெளியிட்டு வரும் இணையவாசிகள், அந்த ஆடவருக்குப் புதிய ரிக்ஷா ஒன்றை வாங்கித்தர விரும்புவதாகத் தெரிவித்தனர்.

