திருச்சி: திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் இருந்து ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற திருடர்கள் நிச்சயம் வடமாநில கொள்ளையர்களாகத் தான் இருக்கவேண்டும் என்று சந்தேகித்துள்ள போலிசார், புதுக்கோட்டையில் சிக்கிய ஆறு பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
போலிசாரின் இந்த சோதனை காரணமாக நேற்று திருச்சி மாநகரில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் எங்கும் அல்லோலகல்லோ கலப்பட்டது. இந்த நகை கொள்ளையர்கள் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு தப்பிச்சென்று விட்டதாகவும் போலிசாருக்கு மற்றொரு புதுத் தகவல் கிடைக்க போலிசார் அங்கும் விரைந்தனர்.
புதுக்கோட்டை டைமன்ட் லாட்ஜில் தங்கியிருந்த அறுவர் கொண்ட ஒரு வட மாநில கும்பலை போலிசார் சுற்றி வளைத்தனர். இவர்கள் எல்லாருமே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. புதுக்கோட்டை விடுதியில் தங்கியிருந்த 5 வடமாநில இளைஞர்களிடம் திருச்சி தனிப்படை போலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் போர்வை விற்க வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த 6 வடமாநில இளைஞர்களுக்கும் திருச்சி நகைக்கடை கொள்ளைக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில் சிங்கம், முயல் முகமூடிகளை அணிந்து இருவா் உள்ளே நுழைவதும் பின்னா் தரைதளத்தில் இருந்த ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம், 180 கிராம் வைர நகைகளைத் திருடிச் சென்றதும் தெரியவந்தது. அத்துடன் போலிசார் அடையாளம் காணமுடியாத அளவுக்கு தாங்கள் நடமாடிய பகுதிகளில் மா்ம நபா்கள் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டுச் சென்றிருந்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணா்கள் மா்மநபா்களின் தடயங்களைச் சேகரித்தனா். மோப்பநாய் அா்ஜூன் பள்ளி மைதானத்தில் சிறிது தூரம் ஓடிவிட்டு படுத்துக்கொண்டது. இன்னும் இரு தினங்களில் கோடிக்கணக்கிலான நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலிசார் தெரிவித்துள்ள நிலையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

