திருச்சி: திருச்சியில் உள்ள பிரபல லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் இருந்து ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற திருடர்கள் நிச்சயம் வடமாநில கொள்ளையர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று சந்தேகித்துள்ள போலிசார், புதுக்கோட்டையில் சிக்கிய ஆறு பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
ஆனால் இந்த அறுவருக்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது.
திருச்சி மாநகரில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலிசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நகைக் கொள்ளையர்கள் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு தப்பிச்சென்று விட்டதாகவும் போலிசாருக்கு மற்றொரு புதுத் தகவல் கிடைக்க போலிசார் அங்கும் விரைந்தனர்.
புதுக்கோட்டை டைமன்ட் லாட்ஜில் தங்கியிருந்த அறுவர் கொண்ட ஒரு வட மாநிலக் கும்பலை போலிசார் சுற்றி வளைத்தனர். இவர்கள் எல்லாருமே ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆறு இளைஞர்களிடமும் திருச்சி தனிப்படை போலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் போர்வை விற்க வந்தவர்கள் என தெரியவந்தது.
இந்த 6 வடமாநில இளைஞர்களுக்கும் திருச்சி நகைக்கடை கொள்ளைக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்ததில் சிங்கம், முயல் முகமூடிகளை அணிந்து இருவா் உள்ளே நுழைவதும் பின்னா் தரைதளத்தில் இருந்த ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம், 180 கிராம் வைர நகைகளைத் திருடிச் செல்வதும் தெரி கிறது.
அத்துடன் போலிசார் அடையாளம் காணமுடியாத அளவுக்கு தாங்கள் நடமாடிய பகுதிகளில் கொள்ளையர்கள் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டுச் சென்றிருந்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணா்கள் மா்மநபா்களின் தடயங்களைச் சேகரித்தனா்.
மோப்ப நாய் அா்ஜூன் பள்ளி மைதானத்தில் சிறிது தூரம் ஓடிவிட்டு படுத்துக்கொண்டது.
கொள்ளைச் சம்பவம் குறித்து திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் உரிமையாளர் கிரண் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சுமார் 700 முதல் 800 வரையிலான எண்ணிக்கையில் வளையல், தோடு, நெக்லஸ் என சுமார் 13 கோடி மதிப்பிலான தங்கம், பிளாட்டினம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒளிவு மறைவு என்று எதுவும் இல்லை.
"கொள்ளையர்களை விரைவில் போலிசார் பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.
இன்னும் இரு தினங்களில் கோடிக்கணக்கிலான நகைக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைக் கைது செய்துவிடுவோம் என்று போலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

