பணி நேரத்தில் திரையரங்கு சென்று படம் பார்த்த போலிசார் பணி இடைநீக்கம்

பணி நேரத்தில் திரையரங்கு சென்று படம் பார்த்த போலிசார் பணி இடைநீக்கம்

2 mins read

கர்னூல்: பணி நேரத்தில் திரையரங்கம் சென்று படம் பார்த்த ஆந்திர போலிசார் ஆறு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்மா என்ற திரைப்படம் தற்போது வெளியீடு கண்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர காவல்துறையைச் சேர்ந்த ஏழு உதவி ஆய்வாளர்கள் நேற்று முன்தினம் பணி நேரத்தில் திரையரங்கம் சென்று இப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.

மேலும் உற்சாக மிகுதியில் மற்ற ரசிகர்களைப் போலவே இவர்களும் திரையரங்கில் ஆட்டம் போட்டனர். இந்தக் காட்சிகளை காணொளிப் பதிவாக ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதையடுத்து ஏழு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை பணி இடைநீக்கம் செய்து கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் போலிசார் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த உத்தரவை கண்டு கொள்ளாமல் ஏழு போலிசாரும் படம் பார்ப்பதில் குறியாக இருந்துள்ளனர். ஏழு பேரும் நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர்கள் என்று கூறப்படுகிறது.

திரையரங்கில் எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் ஏழு பேரும் சிக்கலில் சிக்கிக் கொண்டனர்.

படம் முடிந்து திரையரங்கில் இருந்து வெளியே வந்த அடுத்த சில நிமிடங்களில் ஏழு பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியானது.

அவர்களிடம் பணியில் அலட்சியமாக இருந்தது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் பணி நேரத்தில் போலிசார் திரைப்படம் பார்த்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.