புவனேஷ்வர்: பில்லி, சூனியம் வைத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 6 முதியவர்களைக் கொடுமைப்படுத்திய 22 பெண்கள் உள்ளிட்ட 29 பேரை ஒடிசா மாநிலப் போலிசார் கைது செய்துள்ளனர்.
அங்குள்ள கன்ஜன் மாவட்டம், கோபாபூர் கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் அண்மையில் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். இதற்கான காரணம் தெரியாத நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மேலும் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அண்மையில் இதுகுறித்து ஒன்றாகக் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது யாரேனும் தங்கள் கிராமத்தின் மீது பில்லி, சூனியத்தை ஏவிவிட்டிருக்கலாம் என்று சிலர் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
இதையடுத்து அதே கிராமத்தில் வசிக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட 6 முதியவர்கள் மீது கிராம மக்களின் சந்தேகப் பார்வை பதிந்தது. அடுத்தடுத்த உயிரிழப்புகளுக்கு இந்த முதியவர்களின் மாந்திரீகம்தான் காரணம் என்று அவர்கள் கருதினர்.
இதையடுத்து 6 முதியவர்களுக்கும் தண்டனை கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இதன் பேரில் 6 முதியவர்களும் நேற்று முனதினம் அவர்களது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வரப்பட்டு, சரமாரியாகத் தாக்கப்பட்டனர். இச்சமயம் கற்கள் மற்றும் இடுக்கியால் முதியவர்களின் வாயில் தாக்கி பற்களைக் கொடூரமாகப் பிடுங்கியுள்ளனர்.
இதையடுத்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட 22 பெண்கள் உட்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

