புதுடெல்லி: புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பரப்ப உலகச் சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர், தொழில்நுட்பத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
காந்தியின் பிறந்தநாளை ஒட்டி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை ஒன்றில், வெறுப்பு வன்முறை, துன்பமில்லா வளமான உலகம் படைக்க தோளோடு தோள் நின்று அனைவரும் உழைப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம்தான் காந்தியடிகளின் கனவை நனவாக்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"தனது எண்ணத்தைப் புகழ்பெற்ற பாடலான 'வைஷ்ணவ ஜனா தோ' மூலம் காந்திஜி விளக்குகிறார். அதாவது பிறரின் வலியை உணர்ந்து துயரத்தைப் போக்குபவரே உண்மையான மனிதன் எனக் காந்தி குறிப்பிடுகிறார்.
"தேசியவாதியாக இல்லாத ஒருவரால் சர்வதேசவாதியாக இருக்க முடியாது என கடந்த 1925ஆம் ஆண்டு 'யங் இந்தியா' பத்திரிகையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியவாதம் ஓர் உண்மைத்தன்மையை எட்டினால் மட்டுமே சர்வதேசவாதம் என்பது சாத்தியமாகும் என்றும் காந்தி கூறுகிறார்," என தமது கட்டுரையில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தின் அனைத்து பிரிவினர் மீதும் காந்தியடிகள் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகின் கோடிக்கணக்கான மக்களுக்கு காந்தியடிகள் தனது போதனைகளால் தொடர்ந்து துணிச்சலை அளித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

