'ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது பெரும் தவறு'

'ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது பெரும் தவறு'

2 mins read

புதுடெல்லி: காஷ்மீர் பட்காம் பகுதியில் இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப் பெரிய தவறு என்று நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்களும் இறந்தனர்.

இதுபற்றி பேசிய ராகேஷ் குமார் சிங் பதாரியா, "நமது எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் சென்றதைக் கவனிக்காமல் அது எதிரி நாட்டு ஹெலிகாப்டர் என தவறுதலாக நினைத்து நம்முடைய ஏவுகணை மூலம் அந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது மிகப்ெபரிய தவறு. இந்த தவற்றைச் செய்த 5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடந்து அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் விமானப்படை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் பாரத்துக்கொள் வோம்," என்றார்.

காஷ்மீரில் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் தீவிரவாதி நடத்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படையினர் குண்டு வீசி அழித்துவிட்டுத் திரும்பினர்.

இந்தச் சம்பவத்தின்போது பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் பாராசூட் மூலம் குதித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தீவிர கண்காணிப்பில் இருந்த இந்திய விமானப் படையினர் எதிரி நாட்டு ஹெலிகாப்டர் என நினைத்து இந்தியாவின் எம்ஐ-17 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டனர்.