பயங்கரவாதிகள் ஊடுருவல்; விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

பயங்கரவாதிகள் ஊடுருவல்; விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

2 mins read

புதுடெல்லி: பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் தலைநகர் புதுடெல்லியில் ஊடுருவியிருப்பதாக இந்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்துள்ளதாகவும் விமான நிலையங்களில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத் துறை அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதால் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பதான்கோட், ஹிண்டன் உள்ளிட்ட விமானப் படைத் தளங்கள் கூடுதல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் பண்டிகை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்தப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் டெல்லி உள்பட வட மாநிலங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தப் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து வியாழக் கிழமை அன்று பிரதமர் மோடி தனது இல்லத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மனித வெடிகுண்டு மூலம் தற்கொலைத் தாக்குதல், காரில் வெடிகுண்டுத் தாக்குதல் போன்ற முறைகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்த டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், "உளவுத் துறை தகவலைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை ரோந்துப் பணியைத் தீவிரமாக்கியுள்ளது. துர்கா பூஜை, ராம்லீலா பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதால் தலைநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போலிஸ் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது," என்றார்.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் ஊடுருவ 450-500 பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் பயங்கரவாத முகாம்களில் காத் திருப்பதாக கடந்த மாதம் ராணு வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்த தால் படைகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.