கத்திகார்: பீகார் மாநிலத்தில் அறுபது பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் இருபது பேர் காணாமல் போயினர். மூவர் மாண்டனர் என்று அதிகாரிகள் கூறினர்.
கத்திகார் மாவட்டம் வஜித்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அண்டை மாநிலமான மேற்கு வங்காள மாநிலத்தின் ராம்பூர் ஹாட் பகுதியில் பொருட்கள் வாங்கிவிட்டு நேற்று முன் தினம் இரவு ஊர் திரும்பியபோது விபத்து நேர்ந்தது.
அறுபது பேருடன் மகாநந்தா ஆற்றைக் கடந்து சென்றபோது அந்தப் படகு திடீரென நிலை குலைந்து ஆற்றில் கவிழ்ந்தது.
தண்ணீரில் விழுந்த சிலர் உயிருக்குப் போராடினர். சிலர் நீந்தி கரைசேர்ந்தனர்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஆற்றில் குதித்து சிலரை காப்பாற்றி கரை சேர்த்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்புப் படையின் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
படகில் பயணம் செய்தவர்களில் பாஜக எம்பி ராம் கிரிபால் யாதவும் ஒருவர். ஆற்றில் தத்தளித்த இவரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
மூவர் சடலங்களாக மீட்கப் பட்டனர். இருபதுக்கும் மேற்பட் டோரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடை பெறுகிறது.
அந்த படகில் சுமார் 40 பயணிகள் செல்ல முடியும் என்றும் ஆனால் இரண்டு மடங்கு பயணி கள் ஏற்றியதால் படகு கவிழ்ந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
படகு விபத்துக்குள்ளான காரணம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

