மரம் வெட்ட கடும் எதிர்ப்பு

மரம் வெட்ட கடும் எதிர்ப்பு

2 mins read
33c85380-94b1-4d20-9759-3af60c2b04a4
-

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பெருநகரின் ஆரே காலனியில் 2,646 மரங்களை வெட்டுவதற்கு நேற்று கடும் எதிர்ப்பு கிளம்பி ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

சமூக ஆர்வலர்கள் பலர் மரத்தைக் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டனர். போராட்டத்தை ஒடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தது 40 பேர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஆரே காலனியில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் ஆரே காலனி வனப் பகுதியில் உள்ள 2,646 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதியளித்தது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து சோரு பாதெனா என்பவர் தாக்கல் செய்த மனுவை நேற்று முன்தினம் மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மரங்களை வெட்டும் பணி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கப்பட்டது. அன்று நாள் முடிவதற்கு முன்பு ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டிருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சுமார் 400 பேர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்க போலிசாரும் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போலிசார், சுமார் 60 பேரை தடுப்புக் காவலில் வைத்தனர்.

இந்த நிலையில் மும்பை போலிஸ் சார்பில் பேசிய பிரனாயா அஷோக், "அரசாங்க ஊழியர்கள் கடமை ஆற்றுவதைத் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா நடைமுறைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்படு கின்றன," என்றார்.