பெங்களூரு: கா்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு வழக்குரைஞா்களின் பெயர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலை மையிலான கொலீஜியம் குழு மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.
உளவுத் துறை அறிக்கையை அடிப்படையாக வைத்து கொலீஜியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதையடுத்து வழக்குரைஞா்கள் எஸ்.விஸ்வஜித் ஷெட்டி, இந்திரகுமாா் அருண், முகமது கெளஸ் சுக்ரி கமல், இ.சீதாராமையா இந்த்ரேஷ் ஆகியோரின் பெயா்களை அது மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக கொலீஜியம் பரிந்துரை செய்த பட்டியலை மத்திய அரசு திருப்பியனுப்பியது. நில ஆக்கிரமிப்பு, ரவுடி கும்பலுடன் விஸ்வஜித் ஷெட்டிக்கு தொடா்பிருப்பதாகக் கூறப்படும் புகாரை சுட்டிக் காட்டிய மத்திய சட்ட, நீதித் துறை அமைச்சின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரி திருப்பி அனுப்பியது.
இதேபோல், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திரகுமாா் அருணின் பரிந்துரையும் திருப்பி அனுப்பப்பட்டது. வேறு சில காரணங்களுக்காக முகமது கெளஸ், சீதாராமையா ஆகியோரின் பெயா்களையும் கொலீஜியத்துக்கு மத்திய சட்ட அமைச்சு திருப்பி அனுப்பியது. இந்த நிலையில் நால்வர் தொடா்பாக உளவுத் துறையிடமிருந்து கொலீஜியத்துக்கு அறிக்கை கிடைத்தது. அதன் அடிப்படையில் நால்வரையும் மீண்டும் பரிந்துரை செய்ய கொலீஜியம் முடிவு செய்தது.
உளவுத் துறையின் விசாரணையில் நால்வரின் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான நற்பெயா் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொலீஜியம் கூறியுள்ளது.

