பிரகா‌ஷ் ராஜ்: அச்சத்தைத் தூண்டுகிறார் மோடி

பிரகா‌ஷ் ராஜ்: அச்சத்தைத் தூண்டுகிறார் மோடி

2 mins read
95ea9792-57bb-422b-8cba-0244d86c0285
தமிழகத் திரைப்படத் துறையைச் சேர்ந்த மணிரத்னம், ரேவதி. -

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரகா‌ஷ் ராஜ் கருத்துத் தெரிவித்துள்ளார். "கடிதம் எழுதிய பிரபலங்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பது திகைப்பை ஏற்படுத்துகிறது.

"சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் உதவியற்றவர்களின் நிலையும் அடித்தட்டு மக்களின் நிலையும் என்னவாக இருக்கும்.

"மோடி ஒரு நாட்டின் தலைவரான பிறகு அவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதை நிறுத்த வேண்டும். அவர் இரு தரப்பின் கருத்துகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறார்," என்று கூறினார்.

இந்தியாவில் நடக்கும் கும்பல் வன்முறையை கண்டித்தும், இதில் பிரதமர் தலையிடக் கோரியும், ஜூலை 23ஆம் தேதி பிரபலமானவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.

அவர்களில் இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூக வியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை மோடிக்கு எழுதினர்.

"ராமர் பெயரில் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. எனவே, கருத்து வேறுபாடு கொண்டவர்களை 'தேசத்துக்கு எதிரானவர்கள்' என்றும், 'நகர நக்சல்கள்' என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது" என அவர்கள் அக்கடிதத்தில் வலியுறுத்தியிருந்தனர்.