2000 ரூபாய் நோட்டுகளை ஒதுக்குகிறது எஸ்பிஐ

புதுடெல்லி: இந்தியாவின் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) 2000 ரூபாய் நோட்டுகளை தனது ஏடிஎம் மையங்களில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி பெரிய தொகை மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை  ஏடிஎம் மையங்களில் அவ்வங்கி இனி நிரப்பாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கறுப்புப்பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. 

அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும் இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

அத்துடன், அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானதால் புதிய ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில்  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஈடுபட்டுள்ளது, ரூ.2000 நோட்டுகளை நீக்கிய பின்னர் ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.500 நோட்டுகளை நீக்கும் பணிகளை அவ்வங்கி தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Loading...
Load next