தம் கட்சிக்காரர் என்றும் பாராது நடவடிக்கை எடுத்த ஆந்திர முதல்வருக்கு பாராட்டு மழை

தம் கட்சிக்காரர் என்றும் பாராது நடவடிக்கை எடுத்த ஆந்திர முதல்வருக்கு பாராட்டு மழை

2 mins read
b85662fe-d7ca-472d-a2a3-77aedbfa38a3
பெண் அதிகாரியின் வீட்டுக்குச் சென்று மிரட்டியதாக கைது செய்யப்பட்ட எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி. படம்: இந்திய ஊடகம் -

நெல்லூர்: நெல்லூர் வட்டாரத்தில் உள்ள வெங்கடாசலம் மண்டல வளர்ச்சி அதிகாரி ஏ.சரளா என்பவர் அளித்த புகாரின் பேரில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டியும் அவரது உதவியாளர் ஸ்ரீகாந்த் ரெட்டியும் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

குடிநீர் இணைப்புக்காக தமது நண்பர் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரி சரளா தாமதம் செய்வதாக அறிந்த எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி, வெள்ளிக்கிழமை இரவு நேராக கல்லுருபள்ளி என்னும் இடத்தில் உள்ள அதிகாரியின் வீட்டுக்குச் சென்றார். அவரது உதவியாளரும் அவருடன் சென்றார்.

சரளாவையும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் வாய்க்கு வந்தபடி கொச்சையாகப் பேசிய எம்எல்ஏ, மனு மீது உடனடியாக சாதகமான நடவடிக்கை எடுக்காவிட்டால் நடப்பது வேறு என்று மிரட்டி விட்டுச் சென்றாராம்.

அவர் சென்ற பின்னர் தமது வீட்டில் மின்சாரமும் கேபிள் தொலைக்காட்சி இணைப்பும் துண்டிக்கப்பட்டதாக அதிகாரி சரளா போலிசில் அளித்த புகாரில் தெரிவித்து இருந்தார்.

எம்எல்ஏ மீதான புகார் என்பதால் அதனை வாங்க மறுத்த காவலர்கள், உதவி ஆய்வாளர் வந்த பின்னர் கொடுக்குமாறு கூறினர். நெடுநேரம் காத்திருந்த சரளா உதவி ஆய்வாளர் வந்ததும் புகாரை அவரிடம் கொடுத்தார்.

பெண் அதிகாரி ஒருவர் ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு எதிராக புகார் தெரிவிக்க வந்திருப்பது ஊடகங்களுக்குப் பரவியது. பின்னர் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் காதுகளுக்கும் அச்செய்தி எட்டியது.

டிஜிபி கௌதம் சாவங் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரைத் தொடர்புகொண்ட முதல்வர் ஜெகன் மோகன், உண்மை விவரத்தை அறிந்து தெரிவிக்குமாறு கூறினார். எம்எல்ஏ மிரட்டியது உறுதியாகத் தெரிய வரவே அவர் மீது நடவடிக்கை எடுக்க போலிசுக்கு முதல்வர் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை நெல்லூர் போலிசார் எம்எல்ஏவையும் அவரது உதவியாளரையும் கைது செய்தனர். தமது கட்சி எம்எல்ஏ என்றும் பாராமல் நடுநிலையாக நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.