மும்பை: வரும் 21ம் தேதி மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான பிரசாரத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
நட்சத்திர பேச்சாளராக ராகுல் காந்தி இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் தாய்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது கட்சியினர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
டெல்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 8 மணிக்கு பேங்காக் செல்லும் விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் ராகுல் கந்தி புறப்பட்டுச் சென்றார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ்கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிலந்த் தியோராவுக்கும் சஞ்சய் நிருபத்துக்கும் வெளிப்படையாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்யமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைவர் அசோக் தன்வர் நேற்று முன்தினம் திடீரென கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியி லிருந்து விலகினார்.
பூபேந்திர்சிங் ஹூடாவுக்கும் தன்வருக்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியதால் தன்வர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். தேர்தலைச் சந்திக்க இருக்கும் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியில் உட்பூசல் உச்சமடைந்துள்ளது.

