புதிய அணை: சொன்னதையே திரும்பச் சொல்லும் கர்நாடகா

புதிய அணை: சொன்னதையே திரும்பச் சொல்லும் கர்நாடகா

2 mins read

புதுடெல்லி: முன்னொரு காலத்தில் மைசூர் மாகாணத்துக்கும் மெட்ராஸ் மாகாணத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, காவிரியில் அணை கட்ட வேண்டுமானால் இரு மாகாணமும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

எனினும், கர்நாடக அரசு இதைக் கண்டுகொள்ளாமல், கடந்த ஜூன் மாதம் மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியது. கடிதத்தில், மேகதாதுவில் அணை கட்டப்போவதாகத் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக ஜூலை மாதம் விவாதக் கூட்டமும் நடத்தப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. எனினும், தனது முடிவில் பிடிவாதமாக இருந்துவந்த கர்நாடக அரசு, தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கடிதத்தில், "காவிரியின் குறுக்கே அணை கட்ட, காவிரியால் பயனடையும் தமிழ்நாட்டிடம் கருத்து கேட்கத் தேவையில்லை.

"அதேபோல், மேகதாதுவில் அணை கட்டுவதால் அங்குள்ள குறைந்த வனப்பகுதியே நீரில் மூழ்கும். 2018ல் உச்ச நீதிமன்றம் காவிரி தொடர்பாக வழங்கிய தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரில் குறைவில்லாமல் அளிக்கும் வகையில் அணை கட்டிக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை," என்பது போன்ற அம்சங்களைத் தெரிவித்துள்ளது.

காவிரியில் அணை கட்டுவதால் காவிரி வனப்பகுதி, அதாவது மேகதாது அணை அமையும் பகுதியைச் சுற்றியுள்ள 6 கிராமங்கள், சுமார் 4,996 ஹெக்டர் நிலம் ஆகியன நீரில் மூழ்கும் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற ஆபத்துகளை கருத்தில் கொள்ளாமல் கர்நாடக அரசு இப்போது மீண்டும் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது