பயங்கரவாத நிதி ஆதரவைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் மெத்தனம்

பயங்கரவாத நிதி ஆதரவைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் மெத்தனம்

1 mins read
a9604cfd-13d1-41d5-9e36-c92cb40147c4
-

பயங்கரவாதத்தில் ஈடுபடும் தனிநபர்களுக்கு அமைப்புகளுக்கும் எதிரான ஐக்கிய நாட்டுத் தீர்மானத்தை முழுமையாகச் செயல்படுத்த பாகிஸ்தான் தவறிவிட்டதாக கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் குற்றங்களைக் கண்காணிக்கும் அனைத்துலக அமைப்பான 'எஃப்ஏடிஎஃப்' (FATF) தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கான நிதியாதரவை ஒடுக்குவதற்காக அந்த அமைப்பு பரிந்துரைத்த நாற்பது வழிகளில் ஒன்றைத்தான் பாகிஸ்தான் முழுமையாகப் பின்பற்றுவதாக இந்திய செய்தி நிறுவனமான பிடிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

இதனைக் குறிப்பிடும் அறிக்கை ஒன்றை 'எஃப்ஏடிஎஃப்' அமைப்பு கடந்த சனிக்கிழமை வெளியிட்டது. பயங்கரவாத நிதி ஆதரவைப் போதுமான அளவில் கட்டுப்படுத்தத் தவறிய நாடுகளுக்கான பட்டியலில் பாகிஸ்தானைத் தொடர்ந்து வைத்திருப்பது குறித்து இந்த அமைப்பு அடுத்த வாரம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அநேகமாக அந்தப் பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் என்று 'எஃப்ஏடிஎஃப்' அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

"ஐ.எஸ், அல் கயிடா, லஷ்கர் இ தொய்பா, ஜெய் இ முகம்மது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பான கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் இன்னும் கண்டுபிடித்து, விசாரித்து அவற்றை மேலும் புரிந்துகொள்ளவேண்டும்," என்றது அந்த அறிக்கை.

இந்தப் பிரச்சினையின் தொடர்பில் பாகிஸ்தான் தெளிவான முடிவு எடுக்காமல் மெத்தனமாக நடந்துகொண்டால் அந்நாடு கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று 'எஃப்ஏடிஎஃப்' கடந்த ஜூன் மாதம் எச்சரித்தது. ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளைப் போல பாகிஸ்தானும் ஓரங்கட்டப்பட்டு கூடுதல் வர்த்தகத் தடைகளைச் சந்திக்க நேரிடும் என அது எச்சரித்தது.