சென்னை: உலகெங்கிலும் தமிழை விட தெலுங்கு மொழியில் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம் என அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போது அமைச்சர் பாண்டியராஜன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ், தெலுங்கு சமுதாயத்துக்கு இடையேயான பிணைப்பு தற்போது குறைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் தமிழில் பேசுகின்றனர். எனினும் தமிழை விட தெலுங்கு மொழியில் பேசுபவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடி அதிகம்," என்றார் அமைச்சர் பாண்டியராஜன்
தெலுங்கானா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், சிறந்த உழைப்பாளியான தமிழிசை மீதான நம்பிக்கையின் காரணமாகவே அவரை தெலுங்கானா ஆளுநராக பிரதமர் மோடி நியமித்ததாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை இனி 'தமிங்கிலர்கள்' என்றுதான் குறிப்பிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் 60 வயது தந்தையை கிழவன் என்றும் 70 வயது நடிகரைத் தலைவன் என்றும் தமிழர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலேயே இவ்வாறு கூறியதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைப்பதில்லை என்றும் தமிழ் சினிமா பாடல்களில் குறிப்பிடப்படும் கட்டபொம்மன், ஊமைத்துரை, தேசிங்கு ராஜா போன்ற மன்னர்கள் தமிழர்களே இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

