வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 48,000 பேர் வேலையிழப்பு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தெலுங்கானா மாநில அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சுமார் 48,000 பேர் வேலையை இழந்துள்ளனர். பல்வேறு குறைகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அவர்களைக் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு தெலுங்கானா அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. அவ்வாறு பணிக்குத் திரும்பாதவர்கள் சுயமாகவே வேலையை இழப்பர் என்றும் அவர்களுக்கு பணி நீக்க உத்தரவு அளிக்கத் தேவையில்லை என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டிருந்தார். 

இந்த எச்சரிக்கையை அடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த 1,200 பேர் பணிக்குத் திரும்பினர். மற்றவர்கள் வேலையை இழந்திருப்பதாகவும் வேலைக்குப் புதிய ஆட்கள் நியமிப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“பண்டிகை நாட்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம்,” என்று குறிப்பிட்ட திரு ராவ், போக்குவரத்துக் கழகம் ரூ.1,200 கோடி நஷ்டத்தில் இயங்குவதாகவும் கழகத்தின் கடன் சுமை சுமார் ரூ.5,000 கோடி என்பதையும் சுட்டிக்காட்டினார். 

வேலையிழந்த ஊழியர்களோடு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இனி இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் நிலைமையைச் சரி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தெலங்கானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அடுத்த 15 நாட்களில் நிலைமை கட்டுக்குள் வரும் என்று அரசுத்தரப்பு தெரிவிக்கிறது. 

தற்போது இருக்கும் நிலைமை குறித்து மேலும் பேசிய முதல்வர் ராவ், “போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எந்த ஒழுக்கமற்ற செயல்களுக்கும், மிரட்டலுக்கும் அரசு கட்டுப்படாது. புதிதாக அரசு வேலையில் சேர்பவர்கள், எந்த தொழிற்சங்கத்திலும் இணையமாட்டோம் என்று உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

தெலுங்கானா முதல்வரின் இந்த முடிவுக்கு மாநில பாஜக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அது எச்சரித்துள்ளது.