87வது விமானப்படை தினம்; அபிநந்தனின் குழுவுக்கு பாராட்டு சான்றிதழ்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

அதில், கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி  ஆகியன நடைபெற்றன. ராணுவத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்த பாலகோட் தாக்குதலில் இந்திய விமானப்படையின் 9வது படைப்பிரிவு  மற்றும் அபிநந்தனின் 51வது படைப்பிரிவு  ஈடுபட்டன. இன்று நடைபெற்ற விமானப்படை விழாவின்போது இந்த இரண்டு படைப்பிரிவுகளுக்கும் வீர தீரச்செயல்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. 

பாராட்டு சான்றிதழை படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகளிடம் விமானப்படை தளபதி பதாரியா வழங்கினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதற்கு அடுத்த நாள் அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுப்பியது. அந்த விமானங்களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர்.